புதன், செப்டம்பர் 21, 2011

வழி காட்டும் வான்மறை


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ {1}  الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ {2}  الرَّحْمـنِ الرَّحِيمِ {3} مَـلِكِ يَوْمِ الدِّينِ {4} إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ {5} اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ {6} صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ {7}

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். 2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். 3. தீர்ப்பு நாளின்1 அதிபதி. 4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!  6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.



வழி காட்டும் வான்மறை


உலகில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அவசியமானத் தேவைகளை சொல்லி இறைவனிடம் கேட்கிறோம்.

தற்போது என்ன தேவைப் படுகிறது ? நாளை என்னத் தேவைப்படும் ? என்பதை சிறிதளவு  நம்முடைய புலனுக்கு எட்டுகின்ற வரையில் மட்டுமே கேட்போம். 

இதைவிடவும் ஒவ்வொருவருடைய தற்போதையத் தேவை என்ன ? எதிர்காலத் தேவை என்ன ? என்பதுடன் மேலதிகமாக மரணித்தப் பின் குடியேறுகின்ற வீட்டின் (கப்ரின்) நிலை என்ன ? நிரந்தரமான மறுமையின் ( சொர்க்கமா, நரகமா என்ற ) நிலை என்ன ? என்பவற்றை துல்லியமாக அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மேற்காணும் மூன்று கட்டங்களில் சிறந்தவைகளை அடைந்து கொள்வதற்காக தொழுகையின் ஊடே வலிமையான துஆக்களை கேட்க வைத்து நிறைவேற்றிக் கொடுக்கிறான்.

தொழுகையின் முதல் நிலையில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகிறோம்.
  1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
  2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
  3. தீர்ப்பு நாளின் அதிபதி.
  4.  (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
  5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
  6. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
  7. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனங்களை ஒருவர் தொழுகைக்கு வெளியில் ஓதினால் எழுத்துக்குப் பத்து நன்மைகள் இதையே அவர் தொழுகையில் ஓதினால் அவரது தலை எழுத்தையே மாற்றும் வலிமை வாய்ந்த துஆவாக மாறிவிடுகிறது, வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு திருப்பி விடும் சக்தி வாய்ந்த துஆவாக மாறிவிடுகிறது.

மாற்றிக் காட்டிய வரலாறு. 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த வழிகெட்ட மக்கள் இறையில்லம் கஃபாவில் நிர்வாணமாக நின்று சீட்டி அடித்து, கைதட்டி இறைவணக்கம் செலுத்தினார்கள் அந்த இறைவணக்கம் அவர்களை நேர்வழியில் செலுத்த வில்லை, செலுத்தவும் முடியாது. ஆனால் அதே மக்கள் இஸ்லாத்தை தழுவியப் பின் அவர்களை மேற்காணும் வலிமை வாய்ந்த துஆ வுடன் கூடிய தொழுகை வழிகேட்டிலிருந்து நேர்வழிக்கு மாற்றியது.

எந்தளவுக்கென்றால் சிறிது காலத்தில் அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பொழுது இந்த வெற்றி வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடுவதற்கு மக்கா நகர வீதிகளில் பட்டாசுகளை கொளுத்திப் போட்டு ஆனந்தக் கூத்தாடுவார்கள், கண்ணில் கண்டவர்களை எல்லாம் வெட்டி வீழ்த்துவார்கள், சிறை பிடிப்பார்கள் என்ற வழமையான பீதியில் மக்களெல்லாம் தங்களது வீடுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளே பதுங்கிக் கொண்டனர். 

ஆனால் இவர்களோ அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக இறையில்லம் கஃபாவில் இறைத் தூதருடன் வெற்றியை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தொழுது ஸஜ்தாவில் வீழ்ந்து கிடந்தார்கள்.

இதைக் கண்டு நெகிழ்ந்து போன அந்த மக்கள் அவர்களை மனிதர்களாக மாற்றிய வழியில் நடை போட தங்களை தயார் படுத்திக் கொண்டு சத்திய தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதி பிரமானம் எடுத்துக் கொள்வதற்காக பூட்டிய கதவுகளைத் திறந்து கொண்டு ஆனந்தமாய் ஓடி வந்து அணி, அணியாய் திரண்டனர். அல்லாஹ்வுக்கேப் புகழ்  அனைத்தும்.

மலக்குகளும் ஆமீன் கூறுகின்றனர்.
மேற்காணும் அருள்மறை வசனங்கள் வலிமை மிக்க துஆவாக இருப்பதால் தான் இமாம் அந்த வசனங்களை ஓதி முடித்ததும் வானவர்கள் அணிவகுத்து நின்று ஆமீன் கூறுகின்றனர் என்று அவர்களுடன் நாமும் ஆமீன் கூற வேண்டும் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். 

'இமாம் ' கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்' எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 782

மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனங்களை தினந்தோறும் தொழுகையில் ஓதுபவர்களின் முன் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டு தனது அருளைப்பெற்ற நல்லடியார்கள் சென்ற வழியில் பயணிக்கச் செய்கிறான்.

அல்லாஹ்வின் அருளுக்குரிய நேர்வழிப் பெற்ற அந்த மக்கள் யார் ? என்பதை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் கீழ்காணுமாறுப் பட்டியலிடுகின்றனர்.  

4:69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

றைiவா ! என்னை உனது அருளைப் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர் தியாகிகளுடன் நல்லோர்களுடன் இணைத்து வைப்பாயாக ! என்று இறைத்தூதர் இறைவனிடம் கேட்டதை நான் செவியுற்றேன் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார் புகாரி: 4586.

மறுமையில் ஒரு சாட்டை அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகை விட, உலகின் செல்வங்களை விட சிறந்தது என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் புகாரி: 6415

ஆனால் தொழுகையாளிகள் மறுமையில் இருக்கும் இடமோ அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உயிர்தியாகிகள், உண்மையாளர்கள், நல்லோர்களுடனாகும் இதை விட வேறு பாக்கியம் எதாவது உண்டா ? சிந்தியுங்கள் சகோதரர்களே !

உறக்கமா ? கலக்கமா ?
இருள் சூழ்ந்த நம்முடைய தாயின் கருவறையில் நிம்மதியாக உறங்கி விழித்தைதைப் போல் இருள் சூழ்ந்த கப்ருக்குள் எந்த பீதியும், அச்சமுமின்றி மறுமை கூட்டப்படும் வரை நிம்மதியாக உறங்கி எழுவதற்காக தொழுகையின் அத்தஹயாத்தின் இறுதி இருப்பில் பெருமானார்(ஸல்)அவர்கள் நான்கு கோரிக்கைகள் அடங்கிய வலிமை வாய்ந்த துஆ ஒன்றையும் ஓதி அல்லாஹ்விடம் உதவி தேடும்படி கூறி இருக்கின்றார்கள்.

'அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத்இ வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும்இ கப்ரின் வேதனையிலிருந்தும்இ வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும்இ தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 924

மேற்காணும் நேர்வழிக்கான அல்லாஹ்வின் அருள்மறை வசனத்தையும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தஹயாத் இருப்பின் துஆவையும் தொழுகையில் ஓதாமல் வெளியில் இருந்து கொண்டு ஓதினால் பயன் தராது.

காரணம் மறுமையில் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகை தான் என்றும் அது முறையாக இல்லை என்றால் அதற்கடுத்து விசாரனைக்குட்படுத்தப்படும் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டிருக்கும் என்றும் பெருமானார்(ஸல்)அவர்கள் கூறிவிட்டதால் மேற்காணும் வலிமை மிக்க துஆக்களை தொழுகையில் ஓதினால் மட்டுமே பயனுள்ளதாக அமையும்.

இன்னும் இறைவன் தன் திருமறையில் யார் என்னை நினைவு கூறுகின்றாரோ அவரை நான் நிணைவு கூறுகிறேன் என்றும் பொறுமையுடன் தொழுகையில் என்னிடம் உதவித் தேடுங்கள் என்றுக் கூறுகிறான்.

எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். 2:152.,153.

வீட்டில் இருந்து கொண்டு, ரோட்டில் நடந்து கொண்டு. சுந்தைக் கடையில் நின்று கொண்டு இறைவனை நினைவுக் கூற முடியாது இறைவனை நினைவுக் கூருவதற்கு ஏற்ற இடம் பள்ளிவாசல் தான், அவனிடம் உதவித் தேடுவதற்கு சிறந்த தருனம் தொழுகை தான் என்பதால் மேற்காணும் வலிமை மிக்க துஆக்களை தொழுகையில் ஓதினால் பயனுள்ளதாக அமையும். வெளியிலும் கேட்கலாம் ஆனால் அவ்வாறு கேட்பவர்கள் தொழக் கூடியவர்களாக இருப்பார்கள்.

மனித மிருகங்ககளாக இருந்த மக்காவாசிகளை மனிதாபிமானமிக்க உயர்ந்த மனிதர்களாக மாற்றியது அவர்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இறைவனிடம் கேட்ட உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம் , எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.   என்ற வலிமை மிக்க துஆவாகும்.

அல்லாஹ்வை தொழுகிறோம் என்றுக்கூறி நாம் பள்ளிக்குச் சென்றாலும் தொழுகையின் வாசகங்களில் அடங்கி இருக்கும் வார்த்தைகளில் தொழப்படும் இறைவனைப் புகழ்வதை விட தொழுவோரின் தேவைகளுக்கான வார்த்தைகள் அதிகம் அடங்கி இருப்பதை கவனிக்க வேண்டும்.

மேற்காணும் சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்தின் 7 வசனங்களில் இறைவனைப் புகழ்வது 3 வசனங்களும், மனிதனின் தேவைளுக்காக கேட்கப்படுவது 4 வசனங்களுமாகும்.

அத்தஹயாத்தின் நீண்ட இருப்பில் ஓதப்படுகின்ற வார்த்தைகளில் ஓரிரு வார்த்தைகளே அல்லாஹ்வைப் புகழ்வதாக இருப்பதும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறுவதாகவும் இருக்கிறது மீதி அனைத்தும் நம்முடைய உலக வாழ்க்கை, கப்ரு வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்காக அமைந்திருப்பதை கவனிக்க வேண்டும். 

இதன் மூலம் இஸ்லாம் மனிதனின் முன்னேற்றத்திற்காகவே அருளப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடை என்பது தெளிவாகும்.

யார் மேற்காணும் நேர்வழிக்கான அல்லாஹ்வின் அருள்மறை வசனத்தையும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அத்தஹயாத் இருப்பின் துஆவையும் தொழுகையில் ஓதவில்லையோ அவரது பாதங்கள் தாமாக அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானோர் வழியில் திரும்பிக் கொள்ளும். இந்த துர்பாக்கிய நிலையிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காக்க வேண்டும்.

வல்ல அல்லாஹ் நம் அனைவருடைய பாதங்களையும் அவனின் அருளை அடைந்த நல்லடியார்கள் சென்ற வழியில் திருப்பி விடுவதுடன், இறப்பின் சோதனையிலிருந்தும், கப்ரு வேதனையிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் காத்தருள்வானாக ! 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

அருள்மறைக்குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ 2813

13:28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெல்வெட் துணியில் மூடி பரணியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, அல்லது அலமாரியில் அழகுப்பொருளாக ஆக்கப்பட்டுள்ள அருள்மறைக்குர்ஆனை அது இறக்கி அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்திலாவது எடுத்து ஓதி முழுமைப்படுத்தி அதன் அர்த்தம் புரிந்து அதடினப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முன்வருவோமா ?


சிந்தியுங்கள் சகோதரர்களே !
திருமறைக்குர்ஆன் மனனம் செய்து உள்ளத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்டது, திருமறைக்குர்ஆன் இருக்க வேண்டிய இடம் மனித உள்ளங்களாகும். எந்த ஒன்றும் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதனுடைய சிறப்புத் தெரியும்.

ஆன்ட்டி வைரஸ் இன்ஸ்டால் செய்யாத கணினியில் எத்தனை இலகுவாக வைரஸ் கிருமிகள் உட்புகுந்து கணினியை செயலிழக்கச் செய்து விடுகின்றதோ அதேப்போல் திருமறைக்குர்ஆன் இல்லாத உள்ளங்களில் தீமைகள் இலகுவாகப் புகுந்து உள்ளத்தைப் பாழ்படுத்தி வழிகேட்டில் ஆழ்த்தி விடுகின்றது. 

இதனால் தான் பெருமானார்(ஸல்) அவர்கள் திருமறைக்குர்ஆனை சிறிதளவேனும் மனனம் செய்யாத உள்ளம் பாழடைந்த வீட்டிற்கு சமமானது என்றுக் கூறினார்;கள். நூல்: திர்மிதி

அமைதியைத் தேடி  
பலரின் உள்ளம் இன்று அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைவதைப் பார்க்கிறோம், எத்தனை அலைந்தாலும், என்ன விலை கொடுத்தாலும் அமைதி கிடைப்பதில்லை கிடைக்காது.ஆனால் அமைதி கிடைக்க அருள்மறைக்குர்ஆனை ஓதி அல்லாஹ்வை நிணைவு கூறுவதைத் தவிர  வேறு வழியே இல்லை.

13:28. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

உள்ளம் அமைதி இழந்து அலைவதற்கு அருள்மறைக்குர்ஆனை உள்;ளத்திலலிருந்து தூரப்;படுத்தியது முக்கியக் காரணமாகும்.

மரண வேளையிலும் 
பெருமானார்(ஸல்)அவர்கள் மரணவேதனையில் உடல்ரீதியாக கஸ்டப்படும்பொழுது ''அல்முஅவ்விதத்தைன் '' என்று சொல்லக்கூடிய சூரத்துல் ஃபலக், சூரத்துல் இக்லாஸ், சூரத்துன் னாஸ் ஆகிய அத்தியாயங்களை ஓதி தங்களின் இரு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக்கொண்டு கடுமையான மரண வேதனையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.  என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார் நூல் புகாரி: 5016.

திருமறைக் குர்ஆனின் வசனங்கள் சிறிதளவேனும் நம் உள்ளத்தில் மனனமிருந்தால் தான் நாமும் நம்முடைய மரண வேதனையில் கஸ்டப்படும்பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறயை பின்பற்றி சற்று உடல் வேதனையை குறைத்துக் கொள்ள வசதியாக அமையும். 

மறுமையிலும்
எந்த அருள்மறைக்குர்ஆன் உலகில் மனித உள்ளங்களை தூய்மைப் படுத்தி வழிப் பிசகாமல் நேர்வழியில் செலுத்திக் கொண்டிருந்ததோ அதே அருள்மறைக்குர்ஆன் எந்தப் பரிந்துரையும் பயன்தரமுடியாத மறுமையில் தன்னை சங்கை செய்தவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்றுப் பெருமானார்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

'மறுமை நாளில் குர்ஆனும் அதன்படி செயலாற்றியவர்களும் அழைத்து வரப்படுவர். அப்போது 'அல்பகரா' அத்தியாயமும் 'ஆல இம்ரான்' அத்தியாயமும் முன்னே வரும்'' என்று கூறிவிட்டு, இ(வ்விரு அத்தியாயங்களும் முன்னே வருவ)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வரும்) மூன்று உவமைகளைக் கூறினார்கள். அவற்றை நான் இதுவரை மறந்திடவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் (நிழல்தரும்) மேகங்களைப் போன்று, அல்லது நடுவே ஒளியுள்ள இரு கரும் நிழல்களைப் போன்று, அல்லது அணி அணியாகப் பறக்கும் இரு பறவைக் கூட்டங்களைப் போன்று (முன்னே வந்து) தம்மைக் கையாண்டவருக்காக (இறைவனிடம்) வாதாடும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நவ்வாஸ் பின் சம்ஆன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் முஸ்லிம் 1471

தொடர்ந்து ஓத வேண்டும்.
மனனம் செய்த திருமறைக்குர்ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தால் தான் அது உள்ளத்தில் நிற்கும். ஓதாமல் விட்டு விட்டால் அதை ஷைத்தான் வேகமாக மறக்கடிக்கச் செய்து விடுவான் என்றும், மனனம் செய்து வைத்திருந்த திருமறைக்குர்ஆனின் வசனங்களை மறந்து விடுவது வெறுக்கத்தக்கது என்றும் பெருமானார்(ஸல்)அவர்கள் கூறி எச்சரிக்கை செய்துள்ளார்கள். 

''இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்'' என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், 'மறக்கவைக்கப்பட்டுவிட்டது' என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 5302

இரண்டு நன்மைகள்
திருக்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அது பாவச் செயல்களிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அமைகிறது. அர்த்தம் தெரியாமல் சாதாரணமாக ஓதி வந்தாலும் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் என்று ஏராளமான நன்மைகளை குவிக்கிறது. 

படிப்பினைகள்
  • இவ்வுலகில் திடகாத்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தீமையின் பக்கம் சறுக விடாமல் உள்ளத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும்,
  • கஸ்டமான காலங்களில் உள்ளத்திற்கு அமைதியை கொடுப்பதிலும்,
  • சக்ராத் ஹால் வேதனையை குறைத்து இலகுவாக ரூஹ் பிரியச் செய்வதிலும்
  •   மரணித்தப்பின் மறுமையில் இறைவனிடம் பரிந்துரை செய்வதிலும் 


திருமறைக்குர்ஆன் மனிதகுலத்தின் சிறந்த வழிகாட்டியாக திகழ்வதால் அதை இயன்றவரை மனனம் செய்ய வேண்டும், அதை கைக்கெட்டும் தூரத்தில் வைத்து அடிக்கடி எடுத்து ஓதி வர வேண்டும், இயன்றளவு அர்த்தம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதுவே திருக்குர்ஆனுக்கு நாம் செய்யும் சங்கையாகும்.

எழுதியபடி நாமும், வாசித்தபடி நீங்களும் அமல் செய்யக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருமறைக்குர்ஆன்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

  إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

பரந்து விரிந்த இந்தியப் பெருநாட்டிற்குள் ஆடு மாடுகளை, மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக நுழைந்த வந்தேறிகளின் கூட்டம் மண்ணின் மைந்தர்களாகிய ஆதி திராவிடர்களுடைய அறியாமையை பயன் படுத்தி அவர்களிடத்தில் சிலை வணக்கத்தை புகுத்தி முச்சந்திக்கு முச்சந்தி கோயிலைக் கட்டி வைத்துக்கொண்டு நாங்கள் தேவனின் தலையில் பிறந்ததால் நாங்களே வேதத்தை ஓதுவதற்கும், கோயிலில் பூஜை புணஷ்காரம் செய்வதற்கும் தகுதியானவர்கள் என்றுக்கூறி ஒட்டு மொத்த கோயில் நிர்வாகத்தையும்  தங்களுக்கே நிரந்தரமாக்கிக் கொண்டனர்.

இன்று இந்திய அரசியலில் கால் பதித்து அரசு அதிகாரத்தை கைப்பற்றி கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் முழுவதையும் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு முன்பு வரை ஒட்டு மொத்த ஆரியர்களின் வயிற்றுப்பிழைப்பு கோயிலுக்கு வழங்கும் பிரசாதமும், உண்டியலில் இடும் காணிக்கையைத் தவிர வேறில்லை அதனால் இவர்களின் பிழைப்பில் அவர்கள் குறுக்கிட்டு விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தேவனின் காலில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பதால்  கோயில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல் நகருக்குள்ளும் குடி இருக்கக் கூடாது என்றுக்கூறி அவர்களின் குடியிருப்பை  ஊர் கோடியில் ஒதுக்கி வைத்து அதற்கு சேரிகள் என்று பெயர் சூட்டி தங்களுடைய குடியிருப்பை கோயிலைச் சுற்றியும், நகருக்கு மத்தியிலும் அமைத்துக் கொண்டு அதற்கு அக்ரஹாரம் என்று பெயர் சூட்டி வாழ்க்கையைத் தொடங்கினர்.

சிறகொடிந்தப் பறவைகளாய்
அந்த அப்பாவிகள் வந்தேறி ஆரியர்களால் அடிமைப் படுத்தப் படுவதற்கு முன் இயற்கை எழில் கொஞ்சும் இந்திய மண்ணில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர் இவர்களது வருகைக்குப்பின் சூத்திர முத்திரை குததப்பட்டப் பின் அவர்களது குடியிருப்புக்களாகிய சேரிகளை தவிர்த்து பொது இடங்களில் நடக்கக் கூட முடியாத அவலநிலையை அடைந்து கொண்டதுடன் ஆரியர்கள் அல்லாது வேறு சமுதாயத்து மக்களுடனும் கூட கலந்திட முடியாமல் சமத்துவமும், சகோதரத்துவமும் பறிக்கப்பட்டு சிறகொடிந்தப் பறவைகளாயினர்.


ஒடுக்கப்பட்ட இந்த மக்களுடைய அவல நிலையை மாற்றி அவர்களது துயர் துடைக்க எத்தனையோ இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு குரல் கொடுத்தன அவைகளாலும் ஒன்றும் செய்ய இயலாமல் அவைகளும் ஒரு காலகட்டத்தில் அரசியல் அமைப்புகளாக பரினாமம் பெற்று யாரை எதிர்த்து யாருக்காக ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் அமைப்பு துவக்கப்பட்டதோ எஅவைகளும் திர்க்க வேண்டியவர்களிடமே சட்டமன்ற, பாராளுமன்ற சீட்டுகளுக்காக சரணடைந்து கொண்டன.

மனுதர்மத்தை உடைத்தெறிந்து மனித தர்மத்தை நிலைநாட்டியது மாமறைக் குர்ஆன் 
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன்  49:13.

என்றுக் கூறி மனிதன் கடவுளுடைய தலையிலும் பிறக்கவில்லை, காலிலும் பிறக்கவில்லை ஒரே ஒரு மனிதனே முதலில் படைக்கப்பட்டு அவரிலிருந்து அவருக்கு பெண் துணை படைக்கப்பட்டு உலகம் முடியும் காலம் வரை பிறக்கும் அனைத்து மனிதர்களும் ஒரே அச்சிலிருந்தே ( அந்த இருவரிலிருந்தே ) படைக்கப் படுகின்றனர் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தேறி ஆரியர்களுடைய செட்டப் நாடகத்தை ( மனுதர்மத்தை) உடைத்தெறிந்து மனித தர்மத்தை (சமத்துவத்தை) முழங்கியது மாமறைக்குர்ஆன். 

மேற்காணும் திருமறைக்குர்ஆனின் வசனம் சமத்துவத்தைக் கூறினாலும் சகோதரத்துவத்தைக் கூறவில்லை என்று சொல்லி அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற விட மாட்டார்கள் என்பதால் அவர்களின் உள்ளங்களையும் சூழ்ச்சிகளையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். திருக்குர்ஆன் 49:10. என்றுக் கூறி சகோதரத்துவத்திற்கு அழுத்தமான அஸ்த்திவாரத்தை இட்டு தீண்டாமையை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து வீழ்த்தியது சத்திய வேதம் திருமறைக்குர்ஆன். 

மனிதர்கள் தீட்டும் மலைப் போன்ற சூழ்ச்சி அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு முன் தூள் தூளாக சிதறிப் பறந்து விடும் என்பதற்கு ஆரியர்கள் தீட்டிய தீண்டாமை சூழ்ச்சி அல்லாஹ்வின் சகோதரத்துவ திட்டத்தின் கீழ் சிதறி தவிடுப் பொடியாகியது மிகப் பெரிய உதாரணமாகும்.  

  •  சகோதரர்களுக்கு மத்தியில் ஆண்டான் அடிமை எனும் சிந்தனை வருமா ?
  • சகோதரர்களுக்கு மத்தியில் தலையில் பிறந்தோன், காலில் பிறந்தோன் எனும் ஏற்றத் தாழ்வு சிந்தனை வருமா ?
  • சகோதரர்களுக்கு மத்தியில் கருப்பன் சிவப்பன் என்ற நிறவெறி சிந்தனை ஏற்படுமா ? ஏற்படாது !


அதனால் ஆரியர்களால் சூத்திரர்கள் எனும் அடிமை விலங்கிடப்பட்டிருந்த அப்பாவி ஆதி திராவிடர்கள் அந்த அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கு சகோதரத்துவம் கூறிய இஸ்லாத்தை நோக்கி ஓடி வந்தனர். அவ்வாறு  அடிமை விலங்கை உடைத்தெறிந்து கொண்டு இஸ்லாத்தை நோக்கி வந்து சமத்துவ அந்தஸ்தை அடைந்து கொண்டவர்களே நம்முடைய முன்னோர்கள் ஆவர் அவர்களுடைய வாரிசுகளே இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நானும், படித்துக் கொண்டிருக்கின்ற உங்களிலும் அதிகமானோர் ஆவோம். இன்று சமுதாயத்தில் சமத்துவத்துடனும், சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்து வருகிறோம் என்றால் திருக்குர்ஆன் முழங்கிய விடுதலை முரசு என்பதை மறந்திடக் கூடாது. அதனால் திருக்குர்ஆனை உலகில் வாழக்கூடிய மற்ற எல்லா மக்களை விடவும்  நாம் சங்கை செய்ய கடமைப் பட்டுள்ளோம். 

குர்ஆனை மறந்தவர்களை நோக்கி குர்ஆன் கூறுகிறது 


அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிரிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 3:103

எத்தி வைத்தால்
சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் நாடி இஸ்லாத்தை நோக்கி வந்தவர்களின் வாரிசுகளாகிய நாம் சமத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த திருமறைக்குர்ஆனை அழகுற ஓதி அது ஏவுகின்ற ஏவல்களை நமது வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுகி நடப்பதுடன் அது விலக்கும் விலக்கல்களிலிருந்து இயன்ற வரை விலகிக் கொண்டு வாழ்வதே தீண்டாமை விலங்கை உடைத்தெறிந்த திருக்குர்ஆனை சங்கை படுத்தியதாக அவ்லாஹ்விடம் கருதப்படும்.

திருக்குர்ஆன் கூறும் சமத்துவமும், சகோதரத்தவமும் இன்றும் இந்தியாவின் அடிமைப் படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு எட்டாமல் இருந்து வருகிறது எட்ட விடாமல் அடிமை விலங்கு பூட்டிய ஆதிக்க வர்க்கம் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது செவிப் புலன்களை '' இன்னமா அல் மூஃமினூன இஹ்வா  '' இறைநம்பிக்கையாளர்கள் சகோதரர்களே ! எனும் திருமறை வசனம் அவர்களது செவிப்பறையை தட்டினால் அடுத்த கனமே அவர்கள் தங்களது அடிமை விலங்குகளை உடைத்தெறிவதற்கு இஸ்லாத்தை நோக்கி விரைந்தோட தயங்க மாட்டார்கள்.  

அல்லாஹ்வின் நோன்பாளிகளே ! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் திருக்குர்ஆனை அதிகம் ஓதி வருவதுடன் அது கூறும் ஏவல் - விலக்கல்களை நடைமுறைப் படுத்துவதுடன் அவரவர் சகதிக்குட்பட்ட அளவு சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் கூறும் சத்திய இஸ்லாம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைய உடலாலும், பொருளாலும் உதவ முன் வர வேண்டும்.

எழுதியபடி எம்மையும், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 

 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்